Sunday, March 10, 2024

மக்காச்சோளம் அறுவடை..

மக்காச்சோள பயிரில் மகரந்த சேர்க்கை நடைபெறும் டிசம்பர் மாதம் காலத்தில் ஒரே நாளில் சுமார் இருபது மணி நேரம் பெருமழை பெய்த காரணத்தால் மாசி மாதம் நடைபெறும் அறுவடையில் ஏக்கருக்கு பத்து, பதினைந்து, இருபது குவிண்டால் அளவுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு மகசூல் கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏக்கருக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது குவிண்டால் வரையில் மக்காச்சோள பயிறு மகசூல் கிடைத்தது. இன்றைய வருடம் குவிண்டாலுக்கு ரூபாய் 2250, 2150 என மக்காச்சோள பயிரின் தரத்தை பொறுத்து இடைத் தரகர்களான வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். மார்க்கெட்டில் என்ன விலையோ அந்த விலைக்கு இடைத் தரகர்கள் வாங்குகின்றனர். திடீரென ஏதேனும் ஒரு நாள் மட்டும் குவிண்டாலின் விலையை அதிகரித்து வேண்டியவர்களிடம் பயிறுகளை வாங்கும் நிகழ்வும் நடக்கிறது. 2020ம் ஆண்டில் இப்படியான ரகசிய பேரத்தில் ஒரு வாரம் இடைவெளியில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு என்னுடைய குடும்பத்திற்கு நஸ்டம் ஏற்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக விவசாயம் செய்யாத காரணத்தால் இந்த இடைத் தரகர்களின் வியாபார உத்திகளால் எனக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

Saturday, February 10, 2024

அறுவடை எந்திரங்கள்..

உளுந்துப் பயிறு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை அறுவடை செய்ய பெரிய எந்திரங்கள் வந்துவிட்ட பிறகு கிராமப்புற ஊர்களில் இளைய தலைமுறை மத்தியில் விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் அதிகமாகிவிட்டதை கடந்த ஆறு வருடங்களாக பார்க்க முடிகிறது. இது நல்ல ஆரோக்கியமான விசயமே. இப்போதைய தலைமுறை குழந்தைகள் பொறியியல், கலை அறிவியல். மருத்துவம் போன்ற இளநிலை, முதுகலை படிப்புகளை சர்வ சாதாரணமாக படித்து முடித்து விடுகிறார்கள். சில பத்து வருடங்கள் படித்த படிப்புக்கு வேலை செய்துவிட்டு மீண்டும் பிறந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்வதை பார்க்கையில் வியப்பாக உள்ளது. இத்தகைய ஆர்வத்திற்கு முக்கிய காரணம் அறுவடை எந்திரங்களின் வருகையால் சாத்தியமாகி உள்ளது.  

இன்று காலையில் ஊரிலிருந்து இளையரசனேந்தலுக்கு செல்கையில் தருமத்துப்பட்டி ஊரிலிருந்து மேலப்பட்டி ஊரின் வழியாக மக்காச்சோளம் அறுவடை எந்திரம் செல்கையில், கிராமப்புறங்களில் போடப்பட்ட சின்ன சாலை முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த வேளை, முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகனங்களால் இந்த அறுவடை எந்திரத்தை விரைவில் கடந்து செல்ல முடியவில்லை. நானும் கடந்து செல்ல பத்து நிமிடங்கள் ஆனது. இது நாள் வரைக்கும் இந்த அறுவடை எந்திரங்களால் எங்குமே விபத்து என்பது ஏற்படவில்லை. மார்ச், ஏப்ரல் மாதம் வரையிலும் சாலைகளில் மக்காச்சோளம் அறுவடை எந்திரங்களின் போக்குவரத்து இருக்கும் என்பதால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கொஞ்சம் சிரமம் எனச் சொல்லலாம். 

இரவு நேரம் மேலப்பட்டி வழியாக ஊருக்கு வருகையிலும் இந்த மக்காச்சோளம் அறுவடை எந்திரம் வருகை தந்து பயணிகளின் பஸ்ஸிற்கு ஒரு பதினைந்து நிமிடம் காலதாமதம் ஆனது. இருசக்கர டூவீலர் வாகனத்தில் வந்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்க வேண்டி இருந்தது.

Monday, February 5, 2024

புதிய சாலை..

தென் மாவட்டங்களில் கடந்த வருடம் டிசம்பர் 17 தினம் தொடங்கி மறுதினம் காலை வரையிலும் இருபது மணி நேரம் பெய்த பெருமழைக்குப் பிறகு குளக்கட்டாக்குறிச்சி ஊரின் வழியாக கழுகுமலை, நடுவப்பட்டி ஊருக்குச் செல்லும் சிறிய சாலைகள் ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் தொடங்கி சிறப்பாக நடந்தது. நடுவப்பட்டி ஊரிலிருந்து கழுகுமலை வரையிலான சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சூரிய ஒளியின் வெளிச்சத்தில் பளபளவென மின்னுவதை பார்க்க முடிந்தது.


1997ம் ஆண்டிலிருந்து 1999ம் வருடம் வரை கழுகுமலை ஊரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க ஊரிலிருந்து சைக்கிளில் மிதித்து இந்த சிறிய சாலையின் வழியாக தினமும் சென்று கஷ்டப்பட்டு படித்த எனது அன்புச் சகோதரி தற்போது புதிதாக போடப்பட்ட புத்தம் புது சாலையின் அழகை பார்க்கும் பட்சத்தில் ஒரு பிரமிப்பு உருவாகும் என்பதை சொன்னேன்.


குவைத் நாட்டில் பணி புரியும் எனது உறவினரான மாமாவிற்கு இந்த புதிய சாலையின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபலமான நடிகரின் திடீர் அரசியல் வருகையும் இத்தகைய மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனும் யூகங்களை சொல்ல, வியப்பாக இருந்தது. நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலும் இத்தகைய பணிகள் நடைபெறுவதற்கு கிரியா ஊக்கியாக இருந்தாலும் மகிழ்ச்சியே.

Monday, January 29, 2024

கேசவராஜின் குரலில் சிவபுராணம்..


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் பாடலில் சிவபுராணத்தை பாடும் கேசவராஜின் குரலில் ஒலிக்கும் தெய்வீக ராக ஆலாபனையை @KeshavrajsOfficial யூடியூப் சேனலில் நாற்பது லட்சம் பார்வையாளர்கள் கேட்டு பரவசம் அடைந்துள்ளதை கண்டு பிரமிக்க வைத்தது. சிவபுராணத்தை காலை, மாலை வேளைகளில் பாடும்போது நம்மிடையே உண்டாகும் சூப்பர் நேச்சுரல் பவரை உணர முடிவதுபோல, திருவாசகம் முழுமையும் பாடும்போது எல்லையில்லாத பேரின்பத்தை அடைய முடியும் என்பதை, திருஆனைக்கா ஊரிலுள்ள பரமேஸ்வரனுடைய தண்ணீர் ஸ்தலமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு விஜயமாகி ஒரு கற்தூணில் அமைந்த ஆலங்காட்டு காளியின் சிற்பத்தின் அருகில் அமர்ந்து பாடியபோது உணர்ந்து மகிழ்ந்தது. 2019ம் வருடம், ஜூலை 29 திங்களன்று பதிவேற்றமான வீடியோ காணொளி.  

Sunday, January 28, 2024

பயிர்களின் விலைவாசி..

டிசம்பர் 17 அன்று நண்பகல் 12 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி மறுநாள் காலை வரையில் இருபது மணி நேரமாக பெய்த பெருமழையில் கரிசல் காட்டில் அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்துப் பயிர்கள் சேதாரமாகி மைப்பு எனும் இளவட்டு விழுந்ததில் குவிண்டாலுக்கு கிடைக்க வேண்டிய சரியான விலை இப்போது இல்லை என்பதை பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் சொல்கிறார்கள். மாரியப்பன் என்பவர் கழுகுமலை ஊரில் தேரடி வீதிக்கு அருகில் மாரிசெல்வம் என்ற பெயரில் கமிஷன் கடை வைத்துள்ளார். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து விளையும் மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறு, சூரியகாந்தி, பருத்தி, ஆமணக்கு, எள், தட்டாம்பயிறு, மொச்சை பயிறு என இத்தைகைய பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்கிறார். பக்கத்து ஊரான சீகம்பட்டியிலிருந்து ரமேஸ், குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து குமார் என கமிஷன் கடை வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். 

மக்காச்சோள பயிர்கள் இருபது நாட்களுக்குப் பிறகு அறுவடைக்கு தயாராக உள்ளது. மாசி மாத இறுதியில் அறுவடை நடக்கும் எனச் சொல்லலாம்.